தஞ்சாவூர்:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அப்போது, தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி, இனி எம்.எஸ்.சுவாமிநாதன் கல்லூரி என அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
அது மட்டுமல்லாமல், இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், ‘வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு ஏற்றவாறு பயன்படுத்தும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி, உலகளவில் புகழ் பெற்றவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய அளவில் முத்திரை பதித்து உலகளவில் புகழ் பெற்றவர். பத்ம விபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்று உள்ளார். அவரது நினைவைப் போற்றுகின்ற வண்ணம், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்றார்.