தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் விவசாயிகளுக்கு எதிரான கொடுங்கோல் சட்டங்கள்" - திமுகவை காட்டமாக விமர்சித்த பி.ஆர்.பாண்டியன் - Cauvery

P.R.Pandian press meet at thanjavur: விவசாயிகள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிரான நடவடிக்கை தீவிரமடையும் என காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

P.R.Pandian press
பி.ஆர்.பாண்டியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 11:09 AM IST

காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

தஞ்சாவூர்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவ.25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத விவசாயிகள் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. குறிப்பாக நிலங்களை அபகரித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

விளை நிலங்களை அபகரிப்பதற்கும், விவசாயிகள் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் காவல்துறையைப் பயன்படுத்தி அடக்குமுறையை கையாளுகிறது. வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஓஎன்ஜிசி போன்ற பெருநிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மறைமுகமாக துணை போகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மூத்த ஐஏஎஸ் அலுவலர் மச்சேந்திரநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் அறிக்கையை வெளியிடாமலேயே தான்தோன்றித்தனமாக தமிழ்நாடு அரசு, பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடியவர்களை ஏமாற்றி, விவசாயிகள் ஒப்புதல் இன்றி நிலங்களை கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கிறது.

மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கொடுமைபடுத்துகிறது. பாஜக எதிர்ப்பு என்கிற பெயரால், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடுங்கோல் சட்டங்களையும், நடவடிக்கைகளையும் நிறைவேற்றுகிறபட்சத்தில் அரசியல் கட்சிகளை, கூட்டணி கட்சிகளை அடக்கி ஒடுக்குகிறது.

தமிழ்நாடு அரசு, நில ஒருங்கிணைப்புச் சட்டம் - 2023 என்கிற சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் பயன்படுத்தாத குண்டர் தடுப்புச் சட்டத்தில் விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு வழக்கு போடுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த விவசாயிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திமுக அரசு ஒடுக்கப் பார்க்கிறது. விவசாயிகள் மீது தாக்குதல் தொடர்ந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிரான நடவடிக்கை தீவிரமடையும்.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக மறுக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். வருகிற ஜனவரி 1ஆம் தேதி, தஞ்சாவூரில் துவங்கி டெல்டா மாவட்டங்கள் முழுமையிலும் பிரசாரப் பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் போன்ற தமிழ்நாடு அரசு நில உரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி விளை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரப் பயணம் அமையும்" எனத் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பழனியப்பன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இளைஞரை கடத்திச் சென்று திமுக பிரமுகர் தாக்கியதாக உறவினர்கள் சாலை மறியல் - வாணியம்பாடியில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details