மரத்து நிழலுடன் அமைந்திருக்கும் குடிசைக்குள் இருந்து வெளியே வருகிறார், உத்தம குமரன் (34) என்ற வழக்கறிஞர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு சிரமங்களுக்கிடையில் கல்வி கற்று வழக்கறிஞரானார்.
ஒரு ஆண் குழந்தைக்கு தகப்பனான உத்தம குமரன், பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்துவருகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக இருந்த குமரன் தற்போது கரோனா நெருக்கடியில் தனது குலத்தொழிலான கூடை முடைவதில் ஈடுபட்டுள்ளார்.
அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்தும் பணி முதலியவற்றைத் தொடர நினைத்த இவருக்கு அப்பணிக்களுக்காக வீடு வீடாக செல்ல வேண்டும் என்பது முட்டுக்கட்டை போட்டது. இதையடுத்து கூடை முடையும் தொழிலில் முழு மூச்சாக இறங்கினார். இதையடுத்து காட்டுப் பகுதிகளுக்குச் சென்று ஈச்சம் செடிகளின் கொடிகளை வெட்டி வந்து, ஈச்சம் கூடைகளை செய்யத் தொடங்கிவிட்டார்.
வாட்டியெடுத்த வறுமை....குலத் தொழிலுக்குத் திரும்பிய வழக்கறிஞர்! இது குறித்து அவர் கூறும் போது, "எனது குடும்பத்தை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது குலத்தொழிலான கூடை பின்னும் தொழில்தான் தற்போது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் சாப்பாடு போடும் என நம்புகிறேன். இந்த தொழிலால் நான் படித்த படிப்புக்கும், எனக்கும் எந்த கௌரவ பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதேபோல எங்களது சமுதாய மக்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்” என்றார்.
எங்கள் பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு எவ்வித நிவாரணமும் வந்து சேரவில்லை என்கிறார், குமரன். இவர் பழங்குடியின மக்களை மேம்படுத்துவதற்காக குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, இதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வளர்ச்சியின் அளவு என்ன? - பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்?