தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம், மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருந்த 64 விவாதங்கள் குறித்து அறிவிக்கத்தொடங்கியதும், மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னை, சாலை சீரமைப்பு, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் பிரச்னைகள் தீர்ப்பது குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அவை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய மேயர் சரவணன், ’கடந்த 9-ஆம் தேதி துணை மேயர் தமிழழகனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரில் மாநகராட்சியின் செயல்தலைவரே என அச்சடிக்கப்பட்டு உள்ளதாகவும், செயல் தலைவர் என்ற பதவி இல்லையே எப்படி போஸ்டர் ஒட்டப்பட்டது?’ எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து வெகுண்டு எழுந்த திமுக உறுப்பினர்கள், மற்றும் துணை மேயர் தமிழழகன், 'இது சபைக்கு தொடர்பில்லாத விவகாரம் என்றும், அந்த சுவரொட்டியில், அரசு முத்திரைகள் எதுவும் அச்சடிக்கப்படவில்லை என்றும்' கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயர் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவை சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.