தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் சொந்தமாக மாட்டு பண்ணை வைத்து பாராமரித்து வந்தார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராஜலட்சுமி மலேசியாவில் தங்கி வேலை பார்க்கிறார். இதனால், மணிகண்டன் தனது மகள்களுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மணிகண்டன் மீது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் குற்ற வழக்கு ஒன்று உள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மணிகண்டன் பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் மணிகண்டன், அதே பகுதியில் மாடுகளுக்கு தீவனத்துக்காக, புல் அறுக்க பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அங்கு புல் அறுத்து கொண்டிருந்த போது இவரை பின்தொடர்ந்து வந்த 15 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியது. இதில், தலையில் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதையடுத்து மர்ம கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. மணிகண்டன் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.