தஞ்சாவூர்:தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கடந்த ஜன.15 முதல் ஜன.17 வரை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி முதல் நாள் தைப்பொங்கல் ஆகவும், இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் தினமாகக் கொண்டாடப்பட்டது.
வெளிநாட்டினர் பொங்கல்:தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரை அடுத்த தென்னமநாடு கிராமத்தில் வெளிநாட்டினர் பொங்கல் விழா கொண்டாடினர்.
இதில் பிரான்ஸ், நெதர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளிலிருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், தென்னமநாடு கிராமத்தில் உள்ள பொதுமக்களுடன் சேர்ந்து, பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.
முன்னதாக கிராமத்திற்கு வந்த வெளிநாட்டினருக்குப் பச்சை துண்டு அணிவித்து, நெற்றியில் திலகம் இட்டு விவசாயிகள் வரவேற்றனர். பின்னர் தப்பட்டம், புலியாட்டம், கோலாட்டம் ஆகிய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அப்பகுதி கிராம பொதுமக்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோலப் போட்டி: பொங்கல் பண்டிகை என்றாலே பல்வேறு விதமான போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் மாநகராட்சி சார்பில் கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் மேலவீதி, ராமர் கோவில் அருகே நடைபெற்ற இப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் மனைவி சூசன் ஜேக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் ”தான் கலந்து கொண்ட முதல் விழா இதுவாகும். பெண்கள் கோலத்தை அருமையாக வரைந்துள்ளனர், கோலம் எங்குத் தொடங்குகிறது என்று தெரியாத அளவு கோலமிட்டுள்ளனர், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.
இதேபோல் தஞ்சை அரசர் பள்ளியில் ஒன்றாகப் படித்த 40 நண்பர்கள் ஒன்றிணைந்து தங்கள் குடும்பத்துடன் நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடினார்கள். அப்போது இசைக்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஆடியும் அசத்தினர். மேலும் ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் காணும் பொங்கலை குடும்பத்தினர் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. களத்தில் 800 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்பு!