தஞ்சாவூர்:தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை என பகல் முழுவதும் கடும் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதையடுத்து, பொதுமக்கள் பலர் வெளியில் வராமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளுகின்றனர். சில வசதி படைத்தவர்கள் குளிர் சாதன அறையில் ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.
இருப்பினும் அத்தியாவசிய பணிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக் கொண்டும், வெயிலில் சென்றும் தங்களது பணியை செய்து வருகின்றனர். மேலும், கோடைகால வெயிலை சமாளிக்க பழச்சாறுகள் ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, பைனாப்பிள் தர்பூசணி, இளநீர், பனை நொங்கு, நெல்லிக்காய் ஜுஸ், சர்பத், வெள்ளரிக்காய், சாத்துக்குடி, லஸ்ஸி, மோர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்தி தங்களது உடலை கோடை வெயிலிருந்து பாதுகாத்தும் வருகின்றனர்.
மேலும், திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைத்தும் தண்ணீர் வைத்தும், இளநீர் தர்பூசணி வழங்கியும் பொதுமக்களுக்கு கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று மே 17-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு, வாகனத்தின் முன்புறம் வைத்துள்ள வாலியில் இருந்து தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றிக் கொண்டே சென்றுள்ளார்.
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அந்த செயலை, அவரது நண்பர் வீடியோவாகவும் எடுத்துள்ளார். தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு செல்லும் இளைஞர், பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாலையான தஞ்சை பழைய பேருந்து நிலையம் வழியாக வந்து, தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரோட்டில் சென்று, பின்னர் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் வழியாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு தண்ணீரை தனது தலையில் ஊற்றிக் கொண்டே சென்றுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் அனுப்பியும் வைத்துள்ளனர்.
இதையடுத்து, இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதேபோல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றொரு மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதைதொடர்ந்து, தஞ்சாவூரில் தற்போது இளைஞர் ஒருவர் வெயிலின் கொடுமையை தணிக்க தனது தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற காட்சிக்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதைப்போன்று இளைஞர்கள் செய்வதால், வாகனத்தில் செல்பவர்கள் அதை பார்க்கும் போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வீடியோவை பார்த்த போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர், வாகனத்தின் நம்பரை வைத்து அவர்களை கண்டறிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குளித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை ஒட்டிய கீழவாசல் பகுதியை சேர்ந்த இளைஞர் அருணாச்சலம்(வயது 23) மற்றும் அதை வீடியோ எடுத்த பிரசன்னா(வயது 24) ஆகிய இரண்டு இளைஞர்களுக்கும் தலா ரூ. 2000 அபராதம் விதித்து பொது இடங்களில் இதுபோல செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க:ஆதம்பாக்கத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட நபர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை