ரூ.1.80 லட்சத்தை தவறவிட்டவர்களிடம் பணத்தை ஒப்படைத்த காவல் துறை தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோயிலுக்கு சுற்றுலா சென்றமராட்டிய குடும்பம், தங்களது பணப்பையை காணவில்லை என காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கோயில் வளாகத்தில் தீவிர சோதனை செய்த காவல் துறையினர், அன்று இரவே பணம் இருக்கும் பையை கண்டறிந்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மகாராஸ்டிரா மாநிலம் புனே அருகேவுள்ள கோகினூர் ஐரீஷ் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் ஜோதி (33). இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று (அக்.6) சென்றுள்ளார். பின்னர், இவர்கள் கொண்டு சென்ற உடைமைகளில் ஒரு பையை மட்டும் பெரிய கோயில் வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அவர்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட பையை எடுக்காமல் தாராசுரத்தி காரில் புறப்பட்டுச் சென்றனர்.
பிறகுதான் தாங்கள் கொண்டு வந்த பையை காணவில்லை என அவர்களுக்குத் தெரியவந்தது. அந்தப் பையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், ஆதார் அட்டை, செல்போன், ஏடிஎம் கார்டு போன்றவை இருந்துள்ளன, மேலும் அந்தப் பையை எங்கு வைத்தோம் என்பதை கூட அவர்கள் மறந்து விட்டனர். உடனே தாராசுரத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்குச் சென்று இது குறித்து புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல் துறையினர் கோயிலில் சோதனை செய்தனர். எங்கு தேடியும் அந்தப் பையைப் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பெரிய கோயில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒரு பெட்டி மட்டும் பூட்டியே இருந்தது, அந்தப் பெட்டியில் பையை வைத்து விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. பின்னர், அதை திறந்து பார்த்தபோது அதில் பணம் இருந்தது. உடனே இது யாருடைய பணம் என விசாரித்த போதுதான் ஏற்கனவே புகார் கொடுத்த உமேஷ் ஜோதி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
உடனே நேற்று இரவே அவரை காவல் துறையினர் நேரில் அழைத்து அவருடைய பணம் மற்றும் செல்போன், ஏடிஎம் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைத்தனர். இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களது பாதுகாப்பு மட்டுமின்றி கோயிலில் உள்ள சிலைகளின் பாதுகாப்பு கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், இந்த கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக செயல்படாமல் இருந்தது, நேற்று காவல் துறையினர் ஆய்வு செய்தபோது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரியிடம் காவல் துறையினர் கேட்டபோது, அதை சரி செய்யக்கோரி மேல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்து; மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழப்பு!