தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சாப் என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஒருமாதமாக இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தினர், ஐந்து ஆயிரம் ரூபாய் கட்டினால் ஒரு லட்சம் ரூபாய் கடனும், பத்தாயிரம் ரூபாய் கட்டினால் இரண்டு லட்சம் ரூபாய் கடனும், 15 ஆயிரம் ரூபாய் கட்டினால் மூன்று லட்ச ரூபாய் கடனும், அதற்கு மேல் 30 லட்சம் ரூபாய் வரை சுய உதவிக் குழுக்களுக்கான கடன், அதற்கான தனிநபர் கடன் ஆகியவை வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தனர்.
இதை நம்பிய அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், அந்நிறுவனத்தில் பணத்தை கட்டியுள்ளனர். இந்நிலையில், அந்நிறுவனம் இன்று திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு பணம் கட்டியவர்கள் சந்தேகமடைந்தனர். பின்னர் அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேச முற்பட்டபோது, மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.