தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில், திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தென்றல் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் குண்டுகளையும் பறிமுதல் செய்து, அவரை சோழபுரம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தைச் சேர்ந்தவர் தென்றல். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், இவர் கைத்துப்பாக்கி வைத்துக் கொண்டு பல்வேறு நபர்களை மிரட்டுவதாக, திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில், 10 பேர் கொண்ட தனிப்படையினர், கள்ளப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணஞ்சேரி மற்றும் கள்ளப்புலியூர் கிராமங்களில் தீவிரமாக தென்றலை தேடி வந்தனர். இதனையடுத்து, கும்பகோணம் - சென்னை சாலையில், கள்ளப்புலியூரில் தென்றலை தனிப்படையினர் பிடித்து சோதனை செய்தனர்.
அவரிடம் நடத்திய சோதனையில், கைத்துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து சோழபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து, கைத்துப்பாக்கி வந்தது எப்படி? இது யாருக்குச் சொந்தமானது? இது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியா அல்லது கள்ளத்தனமாக வாங்கப்பட்ட துப்பாக்கியா அல்லது யாரையாவது கொலை செய்யத் திட்டுமிட்ட கைத்துப்பாக்கியை அவர் வைத்திருந்தாரா என்ற பல்வேறு கோணங்களில் ஓசிஐடி எனும் திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விசாரணை முடிவிற்கு பிறகு முழு விவரங்கள் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள தென்றல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகனின் கூட்டாளியாக கருதப்படும் குற்றப்பிண்ணனி கொண்ட தென்றல், கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கைதுப்பாக்கியும், அதில் பயன்படுத்தும் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், கள்ளப்புலியூர் மற்றும் மணஞ்சேரி கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குமரியில் கொட்டும் மழை.. இடிந்த வீட்டிற்குள் 80 வயது முதியவருடன் தவிக்கும் குடும்பம்.. மாற்று வீடு கட்டித்தர அரசுக்கு கோரிக்கை!