நகை வாங்குவது போல் நடித்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு..! சிசிடிவி காட்சிகள் வெளியீடு தஞ்சாவூர்: கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில் உள்ள திருமலை பாலாஜி என்ற நகைக்கடையில், இரண்டு மர்ம நபர்கள், தங்க நகைகள் வாங்குவது போல் நடித்து ரூ,8 லட்சம் மதிப்பிலான 17 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். புகாரின் பேரில், கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி எதிரே பாபு என்பவர் திருமலை பாலாஜி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார், இவரது கடைக்கு நகை வாங்குவது போல வந்த இருவர், பல்வேறு விதமான நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, யாருக்கும் தெரியாமல், கடையிலிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான 17 சவரன் தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து நகைகளைச் சரிபார்த்த போது தான் நகை மாயமானது தெரியவந்தது. இது குறித்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உதவியோடு ஆய்வு செய்த போது, நகை வாங்குவது போல கடைக்கு வந்த இரு மர்ம நபர்கள் தான் நகைகளைத் திருடிச் செல்வது உறுதி ஆனது.
இதனையடுத்து சம்மந்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுடன், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில், உரிமையாளர் பாபு, புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு, நகைகளுடன் தப்பியோடிய இரு மர்ம நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நூதன நகை மோசடி கும்பகோணம் மாநகர் பகுதியில் நகை வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Cyber Crime: இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்.. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!