தஞ்சாவூர்:கும்பகோணம், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், கும்பகோணம் மாநகரப் பகுதிகளில் சாலை வசதி சரிவர செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
கும்பகோணம் மாநகரில் மிக முக்கிய சாலையாகவும், பேருந்து நிலையத்திற்குள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வரும் முக்கிய வழியாகவும் விளங்குவது ஜான் செல்வராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள சாலை. ஆனால், இந்த சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நகரப் பேருந்து நிலையத்தின் முகப்பு வரை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் சிறிய மழை பெய்தாலும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் நிறைந்தும், சாலை எங்கே இருக்கிறது என தேடும் அளவிற்கு உள்ளது. மேலும் இந்த சாலையில் ஆங்காங்கே விபத்தை ஏற்படுத்தும் விதமாக கூரிய கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளது.
அவ்வழி நடந்து செல்வோரை அச்சத்திற்கு உள்ளாக்கும் இந்த கம்பிகள், அவ்வழியே கடந்து செல்லும் வாகனங்களின் டயர்களையும் பதம்பார்த்து விடுகின்றது. இதனால் தினந்தோறும் இந்த சாலை வழி பயணப்படும் மக்கள், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.