தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே ஆரியப்படைவீடு ஊராட்சிக்குட்பட்ட, முழையூர் இந்திரா நகரில், 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, 125 தொகுப்பு வீடுகள் 9 தெருக்களில் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்திரா நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் பள்ளத்தில் அமைந்துள்ளதால், மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
எனவே, இந்த தெருக்களை மேம்படுத்தி, புதிய சாலை அமைத்திடவும், உரிய தெரு மின்விளக்குகள் அமைத்திடவும், பெரும்பாலான தொகுப்பு வீடுகள் வலுவிழந்து காணப்படுவதால், அவற்றை சீரமைத்திடவும், பராமரிப்பின்றிக் கிடக்கும் சமுதாயக் கூடம் மற்றும் பொது கழிவறையை சுத்தம் செய்து புதுப்பித்து தரவும், ஆதிதிராவிடர் இடுகாட்டிற்கும் செல்லும் சாலையை சீரமைத்து தரவும் வேண்டி இப்பகுதி மக்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கோரிக்கை பதாதைகளை ஏந்தி, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.