தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் புதுரோட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதனருகே 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவருமே கூலித் தொழிலாளர்கள். அங்கு அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாடக்கூடிய விளையாட்டு மைதானமும் உள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்று உலக மக்களை அச்சுறுத்தி வருகின்ற வேளையில் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை 16) நோய்த் தொற்று ஏற்பட்ட 9 பேரையும் சேர்த்து பட்டுக்கோட்டை நகரத்தில் மட்டும் இதுவரை 49 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை கரோனா வார்டுகளாக மாற்ற அரசு முடிவு செய்து அதற்காக நேற்று தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பட்டுக்கோட்டை
பெருமாள்கோயில் புதுரோடு செல்லும் சாலையில் மரங்கள், இரும்புத் தகரங்கள் கொண்டு சாலையை தடுத்தனர்.
மேலும் அதே இடத்தில் 150க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் கரோனா வார்டுகளை அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா, நகராட்சி ஆணையர் சுப்பையா ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க:ஆட்டோவில் கஞ்சா கடத்தல்: பெண் உள்பட மூவர் கைது!