தஞ்சாவூர்:பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகேயுள்ள சோமேஸ்வரபுரம் கிராமம் மேலதெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் - பூஜா தம்பதி. கூலி தொழிலாளியான இவருக்கு ஆதேஷ் (5), அனிருத் (2) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆதேஷ் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவன் ஆதேஷ் பிறந்தது முதல் நெற்றியில் சிறிய கட்டி இருந்த நிலையில் சிறுவன் வளர வளர பெரிய அளவில் நெற்றியில் கட்டியுடன் அவதிப்பட்டு வருகிறான். குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால், இந்த கட்டி அப்படியே உள்ளது. எனவே இந்த கட்டியை அகற்றுவதற்கு அதே தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சிறுவனின் தந்தை வாசுதேவன் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி தற்போது கால் சரி வர நடக்க முடியாத நிலையில் உள்ளார்.