தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படும் பனை மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து, அழிவின் விளிம்பிலிருந்து வருவதாக சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏரி, குளங்களின் கரையோரங்கள், வயல்வெளிகளின் வரப்புகளில் பனைமரங்கள் இருக்கும். இவற்றின் வேர்கள் மழை நீரை உறிஞ்சி சேமிக்கும் வசதி உடையவை. மேலும் மண் அரிப்பையும் தடுக்கும் தன்மை உடையவை.
தற்போது பனை மரம் சார்ந்த தொழில்களும் நசிந்து போயின. இதனால் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இருப்பினும் பனை மரத்தைப் பற்றி பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அகில இந்திய மக்கள் சேவை விவசாய பிரிவு மாநில தலைவரும், பனை விதைப்புக்குழுவும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டன. இதற்காக பனை விதைப்பு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.