தஞ்சாவூர்:புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி ஆகியவற்றை அருள்பவராக கருதப்படும் அனுமனுக்கு கிரக தோஷம் நீங்க வடை மாலை சாற்றியும், கல்வியில் தடை, சுனக்கம் நீங்க வெற்றிலை மாலை சாற்றியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை சாற்றியும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாற்றியும், குழந்தை பேறு கிடைக்க சந்தன காப்பு சாற்றியும் வழிபடுவது முக்கிய பிராத்தனைகளாக உள்ளன.
அந்த வகையில் கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகவும், தேவையான அளவிற்கு நல்ல மழை பெய்து, நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் கடும் வெப்பம் தணிய வேண்டியும், மாசி மாத அமாவாசை தினமான நேற்று (பிப்.20) 10 ஆயிரத்து 8 எண்ணிக்கையிலான பூவன், ரஜதாளி, பேயன், செவ்வாழை, தேன்கதளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைப்பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.