தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் வடக்கு தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் 20க்கு மேல் உள்ளது.
இந்த தொகுப்பு வீட்டில் கருப்பாயி என்ற 60 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், இவரது நான்கு பெண் குழந்தைகளும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வந்தனர். இந்நிலையில், கருப்பாயி அந்த தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
திருவிடைமருதூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாகவே விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், கருப்பாயி 100 நாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் கதவைத் திறந்த உடன் அந்த வீட்டின் கூரை இடிந்து அவர் மேல் விழுந்து உள்ளது. உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கி இருந்த மூதாட்டி கருப்பாயியை மீட்டு, திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.