தஞ்சை:அதிமுக ஓபிஎஸ் அணியின் வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று (மார்ச்.18) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "புரட்சித் தலைவி ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி சின்னா பின்னமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். பின்னர் தான், தெரிந்தது பேராசைக்காரன் கையில் இந்த கட்சி போய்விட்டது என்பது. தன் சுயநலம் தான் முக்கியம் என நினைப்பவர் கையில் இந்த கட்சி போய்விட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை யாராலும் மாற்ற முடியாது கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அதில், ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் என்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளதாகவும், இதுவரை எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்று தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவில்லை என்றும் புரட்சித் தலைவி நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொன்ன பிறகும் கூட பதவிக்கு வருவதற்கு துடிக்கிறாயே, உனக்கு இதயம் இருக்கிறதா? நீ மனிதனா? நன்றி உள்ளவனா? விசுவாசம் உள்ளவனா? அம்மா பெயரை சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஈபிஎஸ் என்ற சர்வாதிகாரி கையில் இந்த கட்சி போனால் அது ஜாதி கட்சியாக மாறிவிடும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நீதிமன்றத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும், சட்ட விதிகள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்று உள்ளதால் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.