தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை தவிர்த்துவிட்டு அதிமுக ஆட்சிக்கு வர முடியாது - வைத்திலிங்கம்!

ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை தவிர்த்துவிட்டு அதிமுக ஆட்சிக்கு வர முடியாது என்றும், தேவைப்பட்டால் ஈபிஎஸ்-ஐ தவிர்த்துவிட்டு அதிமுக ஒன்றுபடும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ADMK
ஓபிஎஸ்

By

Published : May 12, 2023, 4:20 PM IST

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைத்திலிங்கம் பதிலடி

தஞ்சை:ஓபிஎஸ் ஆதரவாளரும், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "பிரிந்து இருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஓபிஎஸ் டிடிவி தினகரனைச் சந்தித்தார். பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் சென்றார். இந்தச் சந்திப்பில் எங்களுக்கு விருப்பமில்லை என ஈபிஎஸ் சொல்வது, அவர் வகித்த பதவிக்கு அழகல்ல. இதேபோல பொய்யையே சொல்லி ஏதோ ஒரு சூழ்ச்சியில் சூழ்நிலையில் அவர் முதலமைச்சர் ஆனார். முதலமைச்சருக்கான பண்பு அவரிடம் இல்லை.

மாயமானையும் மண் குதிரையும் நம்பிச் சென்றால் கரை சேர முடியாது என்று சொல்கிறார். அந்த மாயமான் இல்லை என்றால் அவர் முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது. தூதுவிட்டு காலில் விழுந்து முதலமைச்சராகி, அவர்களையே வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகின்ற எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களது கடைக்கண் பார்வைக்காக ஏங்கியவர் இன்று பணபலத்தில் கட்சியை தன்னுடைய சொத்தாக்க நினைக்கிறார். அதனை அதிமுகவின் தூய தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இவர் சண்டிக்குதிரை. சண்டிக்குதிரை எதற்கும் பயன்படாது. அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, பிரிந்து இருக்கும் ஏசி சண்முகம் மற்ற எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஓபிஎஸ்-ஐ விட்டோ சசிகலா, டிடிவி தினகரனை தவிர்த்தோ அதிமுக ஆட்சிக்கு வர முடியாது. தொண்டர்கள் அதிமுக ஒன்றுபட வேண்டும் என நினைக்கிறார்கள். ஓபிஎஸ், டிடிவி இருவரும் இணைந்து செயல்படுவதை அதிமுக தொண்டர்கள் 95 சதவீதம் பேர் வரவேற்கிறார்கள்" என்று கூறினார்.

சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் மீண்டும் அவர்களோடு சேர்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அரசியலில் அன்றைக்கு இருந்த சூழல் வேறு. இப்போது அதிமுக வலிமை பெற வேண்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று சிந்திக்கிறோம்.

ஈபிஎஸ் சுய லாபத்தால் அதிமுகவை அழிக்க நினைக்கிறார், ஒரு போதும் அதிமுகவை அழிக்க முடியாது. வேண்டுமென்றால் ஈபிஎஸ்-ஐ தவிர்த்துவிட்டு அதிமுக ஒன்றுபடும். ஈபிஎஸ் கூடாரத்தில் ஓநாய்கள் காவல் காக்கின்றன, ஆட்டுக்குட்டிகள் எப்போது வெளியில் வரலாம் என்று இருக்கின்றன. ஓநாய்களை ஏமாற்றிவிட்டு ஆட்டுக் குட்டிகள் வெளியே வந்து விடும். ஜெயக்குமார் விளையாட்டுப் பிள்ளை. அவரை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுகவில் பிரிந்து இருப்பவர்களை ஒன்று சேர்த்து மீண்டும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.. துள்ளாத தலைவன்.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய வைத்திலிங்கம்!

ABOUT THE AUTHOR

...view details