தஞ்சாவூர்:அதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும்; அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு பெற்றது செல்லும் என்றும்; ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதில், நீக்கப்பட்டவர்களில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான வைத்திலிங்கமும் ஒருவர், இவர் அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இணைந்தார். பின்னர், பொதுக்குழு கூட்டத்தில்
ஓபிஎஸ் ஆதரவாளரான இவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், பொதுக்குழு வழக்கு தொடர்பாக இன்று கூறப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் கூறும்போது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் , இறுதியில் மறுபடியும் தர்மம் வெல்லும், அதிமுக அடிப்படை தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி, தீய சக்திகளின் தீய திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது, தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.