கும்பகோணம் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் பயங்கர சத்தத்துடன் கசிவு தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே உள்ள துகிலியில், கோட்டூர் அம்பிகா கரும்பு ஆலைக்கு முன்பாக ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. தஞ்சை கதிராமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 7 இடங்களில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமாக எண்ணெய் கிணறுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில், தற்போது 2 எண்ணெய் கிணறுகள் மட்டும் இயங்கி வருகிவதாகவும், இயங்காமல் உள்ள மற்ற 5 கிணறுகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜன.4) மதியம் கீழ சூரிய மூலை பகுதியில் இயங்காமல் உள்ள எண் - 23 என்ற எண்ணெய் கிணற்றில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஆயில் கலந்த கேஸ் வெளியேறியுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் ஆயில் கலந்த கேஸ் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் அதிர்ச்சிக்குள்ளாகியினர். இது கோட்டூர் சர்க்கரை ஆலை பகுதியிலும் பரவியதால், கரும்பு ஆலை ஊழியர்கள் உடனடியாக இது குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில், விரைந்து வந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள் கீழ சூரிய மூலை, கோட்டூர் பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளின் வால்வுகளை விரைந்து சரி செய்தனர். மேலும், முன்னெச்சரிக்கையாக சம்பவ இடத்திற்கு திருவிடைமருதூர் தீயணைப்பு துறையினர், போலீசார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கேஸ் கசிவு ஏற்பட்டவுடன் வால்வுகள் துரிதமாக சரி செய்யப்பட்டதால், அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது, "ஓஎன்ஜிசியில் பயங்கரமாக சத்தத்துடன் கூடிய கேஸ் மேல் நோக்கி அடித்தது. அது கேஸ் கசிவா என உறுதியாக தெரியவில்லை. ஆனால் சத்தம் மட்டும் பயங்கரமாக கேட்டது. அதனைத் தொடர்ந்து, விரைந்து வந்த அதிகாரிகள் அரை மணி நேரத்திற்குள் சரி செய்துவிட்டு சென்றனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீனாவுக்கு பிறகு முதன்முறையாக தமிழகத்தில் கால்பதிக்கும் அடிடாஸ் நிறுவனம்..!