தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே கொற்கை, பம்பப்படையூர், தென்னூர், பட்டீஸ்வரம் சாலை உள்ளது. இதில் தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சாலை விரிவாக்கப்பணி சமீபத்தில் நடைபெற்றது. இதில், சாலையின் குறுக்கே அமைந்த மின்கம்பத்தை அகற்றி, சாலையோரம் அமைக்கும் முன்னரே, மின்கம்பத்தை சாலையின் நடுவில் வைத்தே சாலை விரிவாக்கப் பணியை முடித்துச் சென்றுள்ளனர்.
இப்பகுதியில் தான் கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. எனவே, நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் புதிதாகப்பெற, உரிமம் புதுப்பிக்க, இருசக்கர, நான்கு வாகனப்பதிவு, பொது வாகனங்கள் தகுதிச்சான்று பெறவும் வாகனங்களுடன் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தற்போது இச்சாலை அகலமாக உள்ளது என இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், சிறிது கவனக்குறைவாக, சாலையின் நடுவே மின் விளக்கு இல்லாத மின்கம்பம் இருப்பதை அறியாமல், சற்று வேகமாக வந்தால் மின் கம்பத்தின் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதில் பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் ஆபத்து அதிகம். சாலையின் நடுவே எட்டு மின் கம்பங்கள் அமைந்துள்ளது. அந்த மின்கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சி. சமீபகாலமாக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே, இருசக்கர வாகனத்தை வைத்திருக்கும்போதே, அதனை நடுவில் வைத்து புதிதாக சாலைகள் போடுவது, அடிபம்பை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமலேயே, அதனை மையமாக வைத்து சாலை போடுவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது அந்த வியப்பூட்டும் சம்பவங்களில் கும்பகோணம் தென்னூர் பகுதியில் இந்த சாலை விரிவாக்கப் பணியும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனவே இந்த தென்னூருக்கு அருகில் உள்ள பம்பப்படையூரில் தான் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான எஸ். கல்யாணசுந்தரத்தின் வீடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மின்கம்பத்துடன் சேர்த்து சாலை அமைத்த அலுவலர்கள்... விளாசும் சமூக ஆர்வலர்கள் எதிர்வரும் ஆபத்து, விபத்து, உயிரிழப்பு இவற்றை பற்றி சிறிதும் கண்டு கொள்ளாமல், கவனக்குறைவாக சாலை விரிவாக்கப் பணியினை மேற்கொண்டு, பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பது வேதனை எனவும்; தமிழ்நாடு அரசு, விரைந்து ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே அமைந்துள்ள எட்டு மின் கம்பங்களையும் உடனடியாக அகற்றி, சாலையோரத்தில் அதனை மாற்றி அமைத்திட முன்வர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அடிகுழாயுடன் சேர்த்து போடப்பட்ட ''படா''சுவர் - கான்டிராக்டர் மீது ஆக்ஷன் எடுத்த மேயர்