கரோனா விழிப்புணர்வு: பள்ளி மாணவர் யோகாவில் உலக சாதனை முயற்சி - யோகாவில் புதிய உலக சாதனை
தஞ்சாவூர்: 116ஆவது தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கரோனா விழிப்புணர்வுக்காக யோகாவில் புதிய உலக சாதனையை பள்ளி மாணவர் மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரைச் சேர்ந்த ராஜா அண்ணாமலை - அலமேலு தம்பதியின் மகன் ஹரிஹர அழகப்பன் (16). இவர் பட்டுக்கோட்டை லாரல் சிபிஎஸ்இ பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று (ஆகஸ்ட் 29) 116ஆவது தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ஹரிஹர அழகப்பன் கரோனா விழிப்புணர்வுக்காக புஜபீட ஆசனத்தை 10 நிமிடம் 73 மணித்துளிகள் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
பட்டுக்கோட்டை நாடியம்மன்கோயில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் பெரியசாமி, டாக்டர்கள் சதாசிவம், பிரதீபாசுரேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
யோகாவில் உலக சாதனை முயற்சி செய்த ஹரிஹர அழகப்பனை லாரல் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் சத்யவதிசந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
இதுகுறித்து ஹரிஹர அழகப்பன் கூறுகையில், ”யோகாவில் புஜபீட ஆசனத்தில் 10 நிமிடம் 73 மணித்துளிகள் செய்து சாதனை செய்துள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகும் இருக்கிறது. இந்த சாதனையை செய்ய எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த யோகா மாஸ்டர், எனது பெற்றோர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஹரிகர அழகப்பன் 2017ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை சாய் நிகில் அகாதமியில் யோகா மாஸ்டர் ஸ்ரீநாத் மூலம் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்ட மற்றும் மாநில அளவிலான யோகா போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் மூன்றாமிடம் பெற்று, தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிக்கு தகுதி பெற்றார்.