தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில், இன்று(ஜன.14) தமிழர் திருநாளாம், பொங்கல் விழா, சமத்துவ பொங்கலாக, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செ.இராமலிங்கம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான, கோவி செழியன் ஆகியோர் முன்னிலையில், இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் சகோதரத்துவத்துடன் பங்கேற்க, புதிய பானையில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், தொகுதிக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூர்யனார்கோயில் ஆதீனம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ’மதங்களுக்குள் வேறுபாடுகள், கருத்து மோதல்கள் இருந்த போதும், நாம் யாரையும் எதிரியாக பார்க்க கூடாது. சமீபத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் நான் பேசும் போது, இந்து என்று பேசவில்லை. இந்தியா என பேசினேன் என பல இந்து அமைப்புகள் எனக்கு எதிராக போராட்டங்கள் அறிவித்துள்ளன.
அன்றைக்கு எனக்கு முன்பாக பேசிய சிறுபான்மையினர், வாழ்வதற்கே அச்சமாக இருக்கிறது எனப் பேசியதை தொடர்ந்து நான் பேசும் போது, சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என நாம் அனைவரும் இனத்தால் தமிழர், பேசும் மொழியால் தமிழர். எனவே நாம் ஏன் வாழ அச்சப்பட வேண்டும். ஒருங்கிணைந்த சமுதாய தன்மை இருந்தால் மட்டும் தான் வாழ்வியல் சிறப்பாக இருக்கும்.
அன்றாட வாழ்க்கைக்கு, 1440 பொருட்கள் தேவை. அதற்கு நல்ல வணிகம் நடைபெற வேண்டும். இதன் மூலம் பொருள் ஈட்டி இன்பம் பெற்று திருவருள் பெற வேண்டும். நாட்டில் ஸ்திரமான ஆட்சி இருந்தால் தான் அந்நிய முதலீடு எளிதாக கிடைக்கும்.