தஞ்சாவூர்: கும்பகோணம் பெசன்ட் ரோட்டில், பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் புதிய திறப்பு விழா இன்று வங்கியின் செயல் இயக்குநர் ஏ.பி விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான என் காமகோடி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும், பாதுகாப்பு பெட்டக அறையையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து வங்கி கிளை சார்பில், 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வகை கடனுதவிகள் 25க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், தொழிலதிபர்கள் ராயா கோவிந்தராஜன், ராமன் ராமன் சிவராமன், சென்னை மண்டல மேலாளர் நாகேந்திரகவுட், துணை மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசா அலுவாலா, கிளை மேலாளர் தினேஷ்குமார் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த வங்கியின் செயல் இயக்குநர் ஏ.பி விஜயகுமார் பேட்டி: ”பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி, தமிழ்நாட்டில் மட்டும், ஆண்டிற்கு ரூபாய் 8ஆயிரத்து 500 கோடி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ரூபாய் 6 ஆயிரத்து 500 கோடியை கடனாக வழங்கி, தமிழ்நாட்டிலிலேயே அதிக கடனுதவி வழங்கும் வங்கியாக திகழ்கிறது.
பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் புதிய கிளை திறப்பு மேலும், இந்திய அளவில் முதன்மை வங்கிகளில் ஒன்றாகவும் இந்த வங்கி திகழ்கிறது. கும்பகோணம் கிளை வாயிலாக கடந்த ஒரு மாத முயற்சியில் இதுவரை ரூபாய் 10 கோடி அளவிற்கு வணிகம் மேற்கொண்டுள்ளது. வரும் 31ஆம் தேதிக்கு முன்னர் அனைத்து விதமான கடனுதவிகளும் வாடிக்கையாளர்களுக்கு இக்கிளையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி பியூன் போக்சோவில் கைது