தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கணேசன் (34) - பிரியதர்ஷினி (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கருவுற்றிருந்த பிரியதர்ஷினிக்கு கடந்த 25ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது
செவிலியர்கள் அலட்சியம்
இந்நிலையில், குறைமாதத்தில் பிறந்தால், குழந்தையின் உடல்நலம் சீராக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தையின் வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, குழந்தைக்கு கையில் ஊசி பொருத்தி, அதன் மூலம் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு
தற்போது குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவ நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்ற, குழந்தையின் தந்தை கணேசன் செவிலியர்களிடம் சென்றுள்ளார். அப்போது, பிஞ்சு குழந்தையின் கையில் இருந்த பேண்டேஜை கைகளால் அகற்றாமல், கத்திரிக்கோலை வைத்து வெட்டியதால் தவறுதலாக குழந்தையின் கட்டை விரல் துண்டானதாக குழந்தையின் பெற்றோர் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
பிறந்த குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு ? உரிய நடவடிக்கை
தற்போது குழந்தையில் விரல் துண்டான இடத்தில் ஊசியை வைத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அலட்சியமாக நடந்து கொண்ட செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக்கு ஒத்துழைத்த சமத்து யானைகள்