தஞ்சாவூர்: ஆண்டுதோறும் தை 2ஆம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் அன்று கால்நடைகளை குளிப்பாட்டி அழகுபடுத்தி, பொங்கல் வைத்து படைத்து, அதனை கால்நடைகளுக்கு வழங்குவர். இந்நாளில் கால்நடைகளின் கழுத்துகளை அலங்கரிக்க, பல வண்ணங்களில் நெட்டிகளால் செய்யப்படும் அழகிய மாலைகளை அணிவித்து அழகூட்டுவது வழக்கம்.
இவ்வகை நெட்டி மாலைகள், கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தயார் செய்து வருகின்றனர். இதற்காக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், சீர்காழி, கொள்ளிடம், திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் இயற்கையாக வளரும் பச்சை பசேல் என உயரமாக தக்கையைப் போன்று இலகுவாக இருக்கும் நெட்டிச்செடிகளைப் பறித்துக் கொண்டு வருவர்.
பின்னர், அதன் பச்சை மேல் தோலை கத்தியால் சீவி, வெயிலில் காய வைத்து உலர்த்தி, அதனை 2 மற்றும் 3 இன்ச் அளவுகளில் நீள வாக்கிலும், தட்டையாகவும் நறுக்கி, அதில் அழகிய பூக்களையும் தயார் செய்வர். பின், அதனை ஒன்றரை அடி நீள மாலையாக தாழம் நார் கொண்டு கோர்ப்பர்.
குறைந்தபட்சம் மாலை ஒன்று ரூ.10க்கும், வேலைப்பாடு கொண்ட மாலை ரூ.12க்கும், மிகுந்த வேலைப்பாடு மற்றும் அழகிய பல வண்ண பூக்களைக் கொண்ட மாலைகள் ரூ.15க்கும் விற்பனைக்காக தயார் செய்கின்றனர். இந்த நெட்டி மாலை தயார் செய்யும் பணிகள் ஐப்பசி முதல் மார்கழி வரை மூன்று மாதங்களுக்கு நடைபெறும்.
மார்கழி மாத இறுதி வாரத்தில், விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கி, மாட்டுப் பொங்கல் அன்று நிறைவு பெறும். இதனை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவது வழக்கம். இம்மூன்று மாதங்களிலும் 20 குடும்பங்களைச் சார்ந்த 60க்கும் மேற்பட்டோர் இணைந்து செய்கின்றனர். இது பருவகால தொழில் என்பதால், மாட்டுப் பொங்கலுக்குப் பிறகு, இக்குடும்பத்தினர் வழக்கமான தங்களது விவசாயக் கூலி வேலைகளை கவனிக்கத் தொடங்கி விடுவதாக கூறப்படுகிறது.