தஞ்சாவூர்: தஞ்சாவூரில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சாவூர் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எஸ்டிபிஐ கட்சியை தயார்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மாநிலத் தலைவர் நிர்வாகிகளை சந்திக்கிற கிளை கட்டமைப்பு வரை புதிய பூத் கமிட்டிகளை உருவாக்கும் ஆலோசனைகளை வழங்கி ஒரு பூத் ஒரு கிளை என்கிற நிர்வாக கட்டமைப்புகளுக்கு தேர்தலுக்காக தயார்படுத்தி வருவதாகவும், இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஒடிசாவில் நடைபெற்ற கோரமண்டல் ரயில் விபத்திற்கு காரணமான அதிகாரிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும், ரயில் விபத்துகளை தடுக்க உருவாக்கப்பட்டிருக்கிற 'கவாச்' (Kavach) என்ற அமைப்பு இல்லாததன் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது, எனவே இந்த விபத்திற்கு காரணமான அமைச்சர்கள் அதிகாரிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சனையில் (Female wrestlers issue) பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிறைகளில் வாழும் 37 ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் கூட்டாளிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.