தஞ்சாவூர்:தேசிய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு (Neet Exam) இன்று (மே 07) நாடு முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் 05.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு விதிமுறைப்படி 01.30 மணி வரை மட்டும் தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தாமரை சர்வதேச பள்ளி என்ற ஒரே பெயரில், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் என 40 கி.மீ., தூர இடைவெளியில் இரு பள்ளிகள் இயங்குகின்றன.
இருபள்ளிகளுமே நீட் தேர்வு மையங்களாக உள்ளன. ஆண்டுதோறும் தஞ்சை செல்ல வேண்டியவர்கள் கும்பகோணத்திற்கும் கும்பகோணத்திற்குச் செல்லவேண்டியவர்கள் தஞ்சைக்கும் செல்வதும் என பல மாணவர்கள் நேரம் கடந்து வந்து, தேர்வு எழுத முடியாமல் கண்ணீருடன் வீடு திரும்புவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஏகாம்பாள் மகள் தேன்மொழி, கடந்தாண்டு நீட் தேர்வில் 501 மதிப்பெண் பெற்றும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் தான் சேர வேண்டும் என்ற கொள்கையோடு இம்முறை தேர்வு எழுதத் தயார் செய்திருந்தபோதும், அவர்கள் தஞ்சை மையம் என அங்கு சென்ற பிறகு, அங்கிருந்து கார் மூலம் கடைசி கட்டத்தில், சரியான நேரத்திற்கு கும்பகோணம் தேர்வு மையத்திற்கு வந்தனர்.
இதனால், தேன்மொழி மற்றும் அவரை போல தஞ்சாவூரில் இருந்த மற்றொரு மாணவனும் கடைசி நேரத்தில் வந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றொரு மாணவனான பூபேஷ் என்பவரும் பெயர் குழப்பத்தில் தஞ்சாவூர் சென்று, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில், 45 நிமிடங்களில் தனியாக பயணித்து கும்பகோணம் தேர்வு மையத்திற்கு 01.57 மணிக்குச் சென்றார்.
அவரை தேர்வு விதிமுறைகளைக் காரணம் காட்டியும், அங்கிருந்த அலுவலர்கள் தங்களது மேல் அலுவலர்களை தொடர்புகொண்டு கேட்ட பிறகும், சுமார் 27 நிமிடங்கள் தாமதமாக வந்த பூபேஷை தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால், கண்ணீருடன் தஞ்சையில் உள்ள வீட்டிற்குச் சென்றார்.