தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டியில் உள்ள பூண்டி மாதா ஆலயத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்கா எனப்படும் புனித தலம் உள்ளது. மாதாவிற்கு தங்கத்தில் கிரீடமும், செபமாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரவு வழிபாடு முடிந்து ஆலயத்தின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு மறுநாள் காலை திறக்கபடும்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வழிபாட்டிற்காக ஆலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டபோது, மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்ட ஆலய பாதுகாவலர் இது குறித்து ஆலயத் தலைவர் பாக்கியசாமி, துணைத் தலைவர் அலபோன்ஸ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இருவரும் சம்பவ இடத்திற்கு சென்ற பார்வையிட்டனர். அப்போது மாதாவின் தலையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கிரீடமும், கழுத்தில் இருந்த நான்கு பவுன் நெக்லஸூம், கையிலிருந்த மூன்றரை பவுன் தங்க செபமாலையும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.