தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் தஞ்சாவூர்: பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் ஆலயம், உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோவியில் நவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15ஆம் தேதி அன்று தொடங்கியது. இதனையடுத்து தஞ்சை பெரிய கோயிலில் 9ஆம் நாளான இன்று (அக்.,23) நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
அதே போல் தஞ்சையில் தெற்கு வீதியில் உள்ள காளிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், எல்லையம்மன் கோயிலில் ராஜமாதங்கி என்கிற சரஸ்வதி அம்மனுக்குச் சரஸ்வதி அலங்காரமும், மேலவீதி கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் துர்காம்பிகைக்கு சரஸ்வதி அலங்காரமும் சிறப்பாகச் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
அதே போல் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவையில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், நாலுகால் மண்டபம் ஸ்ரீ சியாமளாதேவி அம்மன் கோயிலில் அம்மனுக்குச் சரஸ்வதி அலங்காரமும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியைத் தரிசனமும் செய்தனர். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ பெரிய நாயகி அம்மனுக்குத் தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. அதில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு நாளை விஜயதசமி அலங்காரம் ஆகியவை நடைபெற்று சுவாமி அம்பு போடுதலுடன் விழா நிறைவு பெற உள்ளன.
தினமும் கலை நிகழ்ச்சியாகத் தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம், பக்தி பாடல்கள், வீணை இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை ஆகிய மாநிலங்களிலிருந்து பரதநாட்டிய கலைஞர்கள் வந்திருந்து நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராஜ ராஜ சோழனின் பள்ளிப்படை குறித்து நீங்காத மர்மங்கள்.. வரலாற்று ஆய்வாளர் கூறுவதென்ன