தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் ஆலயம், உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து கோயிலின் கட்டிடக் கலையையும், சிற்பக்கலையையும் மற்றும் சுவாமியையும் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோயிலில் ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 15-ஆம் தேதி அன்று தொடங்கியது. இதனையடுத்து தஞ்சை பெரிய கோயிலில் 8-ஆம் நாளான இன்று (அக்.22) நவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீ பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக ராஜராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாகச் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது.
அதேபோல் தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கோயில்களான, தெற்குவீதி ஸ்ரீ காமாட்சி அம்மன் என்கிற காளிகா பரமேஸ்வரி கோயிலில், அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரமும், ரேணுகாதேவி என்கின்ற எல்லையம்மன் கோயிலில், ராஜமாதங்கி என்கின்ற சரஸ்வதி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரமும் சிறப்பாக செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி கோ பூஜை, தம்பதி பூஜை, சுவாசினி பூஜை, கன்னிகா பூஜை, பைரவர் பூஜை ஆகியவை நடைபெற்று மஹா தீபாரதனை காட்டப்பட்டது. அதேபோல, மேலவீதி கொங்கணேஸ்வரர் கோயிலில் துர்காம்பிகைக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும் சிறப்பாக செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.