தஞ்சாவூர்:உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில், ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் இன்று வெண்ணெய் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரியகோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இந்தக் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் தனி சன்னதியில் தன்னிச்சையாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழாவில் தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாக விளங்குகிறது.
இந்த சிறப்புமிகு பூஜை தஞ்சை பெரியகோயில் தவிர்த்து வேறு எங்கும் நடைபெறாதது இதன் கூடுதல் சிறப்பாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ம் ஆண்டு பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூன் 18ந் தேதி ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம், ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் வெகு விமர்சையாகத் தொடங்கியது.
10நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய்ப்பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதான்ய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்று வருகிறது.