தஞ்சாவூர்:ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், கடந்த செப் 25-ஆம் தேதி முதல் அக் 1-ஆம் தேதி வரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதில் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, மாலை அணிவித்து வரவேற்று தூய்மை பணி முகாம், சுற்றுலா விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நடைப்பயணம், கைவினைப் பொருள் செயல்முறை விளக்கம், சுற்றுலா கருத்தரங்கு, கோலப்போட்டி, புகைப்படப் போட்டி, ஓவியப்போட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை கால அரசு விடுமுறை விடப்பட்டிருந்ததால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முயற்சியால் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த, பள்ளிக்குச் செல்லும் 35 மாணவர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்ல தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பள்ளி மாணவர்கள் தஞ்சையின் சுற்றுலா இடங்களான பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், வெளிநாட்டு பறவைகளின் சரணாலயம், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7டி திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என பல்வேறு சுற்றுலா தளங்களைக் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.