தஞ்சாவூர்:பாபநாசம் பேரூராட்சியில் தற்காலிக பணியாளரான ராதிகா (31), தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 28ஆம் தேதி பாபநாசம் ஆர்டிபி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தடுமாறி விழுந்த ராதிகாவுக்கு, கால், நெற்றி, மற்றும் கண்களுக்கு கீழ் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பாபநாசம் அரசு மருத்துவமனையில் ராதிகா சிகிச்சை பெற்றுள்ளார். இங்கு அவருக்கு அவசர அவசரமாக தையல் போடப்பட்டு மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் காயம் அடைந்த கண்ணிற்கு கீழ் பகுதி மற்றும் காலிலும் தொடர்ந்து வலி குறையாமலே இருந்துள்ளது.
எனவே இதுகுறித்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு காயம்பட்ட பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்ரேயில், காலில் அடிபட்ட காயத்திற்குள் கொலுசின் திருகாணி இருப்பதும், கண்ணுக்கு கீழ் பகுதியில் உள்ள காயத்தில் சிறிய கல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.