தஞ்சாவூர்:வேர்கள் ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம், அதேபோல் தன்னம்பிக்கை என்ற ஒன்று தான் நம் வாழ்க்கையின் உயர்வுக்கு மூலாதாரம், நடக்கும் பாதைகளை முதலில் சீராக்கிவிட்டால் போதும், அதன்பின் சாதனை என்ற ஒன்று மிகவும் சாத்தியமானது, இதை அறிந்து, நாம் நடை போடும் பாதையைத் தீர்மானித்தாலே போதுமானது, வெற்றி என்ற இலக்கை மனதில் நிலை நிறுத்தி ஓடும் போது தோல்வியினால் தடுக்கி விழுந்தாலும் நம்பிக்கை என்ற கரங்கள் நம்மை மேலே ஏற்றும், அப்போது, நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று நிரூபித்துள்ளார் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுந்தர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலச்சுந்தர் (வயது 27) மாற்றுத்திறனாளியான, இவர் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்குப் பிறந்தது முதல் இடது கை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி இறந்துவிட்ட நிலையில், தாய் விஜயா பள்ளி சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். பாலசுந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தீவிரமான பயிற்சி மேற்கொண்ட பாலசுந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.
இவரது கிரிக்கெட் ஆர்வத்திற்கு, இவரது குடும்பத்தினரும் மற்றும் நண்பர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி தகுதித் தேர்வில் விளையாடி 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து பாலசுந்தர் தேர்வு பெற்றார். இதே போல், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி, சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.