தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது, மூக்கு தொண்டை, அறுவை சிகிச்சைப் பிரிவில் பிறவியிலேயே வாய் பேச முடியாத காது கேட்காத ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கோக்லியர் காது அறுவை சிகிச்சை எனும் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
காது கேளாத குழந்தைகளால் பேச இயலாது. எனவே இந்த குழந்தைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு முழு தீர்வு கிடைக்கும். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 18 பேருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறும்போது, ''தஞ்சை மாவட்டம் முழுவதும் செவித்திறன் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளை பிறந்தவுடன் பரிசோதனை செய்து டிஜசி எனப்படும் சிகிச்சை மூலமாக கண்டறியப்பட்டு, அதற்கு உண்டான அறுவை சிகிச்சையான கோக்லியர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ஏறக்குறைய 50 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.
தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை செய்வதற்கு ஐந்து லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.