தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புகாரத் தெரு ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (வயது 40) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் வசந்தி மீண்டும் கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் தனது கணவரின் வருமானம் போதாது என்ற வறுமை நிலையில் உள்ளதால் மேலும் ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவது முடியாது என்று கருதிய வசந்தி இன்று அதிகாலை பிரசவவலி எடுத்தவுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு உயிருடன் பிறந்த குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு அதனை வாலியில் வைத்து துணியால் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பிரசவத்திற்கு பின் வசந்திக்கு ஏற்பட்ட ரத்தப்போக்கு நேரம் செல்லச் செல்ல அதிகரித்த நிலையில் வீட்டில் உள்ளவர்களிடத்தில் வசந்தி தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்த போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதும், அருகில் ஒரு வாலியில் குழந்தை கொலை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.