தஞ்சாவூர்:கும்பகோணம் தனியார் தங்கும் விடுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச.14) தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் முகமது சுல்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் முகைதீன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, “நேற்று நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் தொடர்பான விவாதத்தின் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல் எழுப்பின. இது எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்து போட்டியிட போடப்பட்ட அஸ்திவாரம்.
சமூக நீதிக்கு குரல் கொடுக்கும், மதவாதத்தை புறம் தள்ளும் முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சிகளும் ஒன்றிணைவதால், தேசிய அளவில் 3ஆவது அணி அமைய வாய்ப்பில்லை. இந்தியாவின் சிறந்த பிரதமர் நரேந்திர மோடி. அவர் இந்திய மக்களால் நம்மால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?
அதுபோலவே, அவர் பிரதமராக இருக்கும் சமயத்தில் தான் ஜி20 அமைப்பில், அவரை முன்னிலைப்படுத்தியே இந்தியாவிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இதனால் இந்தியாவிற்கும் பெருமை. இந்த பொறுப்பினால் அவருக்கும் பெருமை தான். இந்தியப் பிரதமராக மோடியை ஏற்றுக்கொண்ட போதும், அவருடன் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் உள்ளன.
எனவே, நல்லவை செய்யும்போது பாராட்டுவோம். தீயவை செய்யும் போது விமர்சிக்கவும் தயங்க மாட்டோம். அவரை சிறந்த பிரதமராக நாங்கள் ஏற்றுக்கொண்ட போதும், இந்திய யூனியன் முஸ்லீம் - பாஜகவுடன் ஒருபோதும் தேர்தல் கூட்டணி வைக்காது.