தஞ்சை: கும்பகோணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பாபநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா நேற்று (ஜனவரி 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திராவிட இயக்க கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களை 50 ஆண்டுகள் ஏமாற்றியிருப்பதாக தவறான தகவலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆர். என். ரவி பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது.
பாஜக தொடர்ந்து ஆளும் உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில், கல்வி விழிப்புணர்வு, எழுத்தறிவு உள்ளதா?. ஆனால், இடதுசாரி காங்கிரஸ் ஆளும் கேரளா மாநிலம் எழுத்தறிவில் உயர்ந்து நிற்கிறது. ஆளுநர் ரவி, தொடர்ந்து பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு, ஆளுநர் பதவியை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். அவருக்கு ஆளுநராக தொடர தகுதியில்லை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க செய்தியாளர்கள் சந்திப்பின் போது மரபை மீறி செயல்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதையும், வசைபாடுவதையும், அரசியல் அநாகரீகத்தில் உச்சம். இதனால் நிச்சயம் தமிழ்நாட்டில் பாஜக வளராது. பத்திரிக்கையாளர்களின் உரிமையை பறிப்பதும், அவர்களை ஏளனம் செய்வதும், மிரட்டுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாபநாசம் தொகுதிக்குட்பட்ட சுந்தரபெருமாள் கோயில் பகுதியில் அதிக அளவில் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. மலர் வணிக சந்தை வேண்டும் என்ற மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேறும். சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி தொடங்க சான்றிதழ் பெற டெல்லி செல்ல வேண்டிய நிலையிருந்தது. அப்படி சென்றாலும் கூட பெரும்பாலான மனுக்கள் ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டே வருகிறது.
இதற்காக நீதிமன்றத்தை நாடி, பல கோடி வரை செலவு செய்த பிறகே இத்தகைய சான்றிதழ் பெற முடிகிறது. எனவே சிறுபான்மை சான்றிதழ் வழங்கும் ஒரு அலுவலகத்தை தமிழ்நாட்டிலேயே அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அதன் பலனாக தற்போது சிறுபான்மை நலத்துறை சார்பில், தமிழ்நாட்டிலேயே ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, இங்கே சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறேன். திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை பிரச்சனை, கரும்பு விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் பெறாத வங்கி கடன், அவர்கள் பெயரில் இருப்பதை நீக்க வேண்டும். இப்பிரச்சனையில் சுமூக தீர்வு காண தமிழ்நாடு அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருவதால், விரைவில் இதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வழக்கை தள்ளுபடி செய்ய ரூ. 10,000 லஞ்சம் - கையும் களவுமாக பிடிபட்ட எஸ்ஐ