தஞ்சாவூர்: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவாரூரில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு விழாவிற்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலை உழவன் விரைவு ரயில் மூலம் சென்னையிலிருந்து கும்பகோணம் வந்தடைந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் தஞ்சை வடக்கு மாவட்டம் மற்றும் கும்பகோணம் மாநகர் திமுக சார்பில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இன்றி எளிய முறையில் ஆதரவு முழக்கங்களை மட்டும் எழுப்பி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், மாவட்ட கழக செயலாளர்கள் தஞ்சை வடக்கு மாவட்டம் எஸ் கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்டம் துரை. சந்திரசேகரன், திருவாரூர் மாவட்டம் கலைவாணன், தஞ்சை மேயர் ராமநாதன், கும்பகோணம் துணை மேயர் சுப.தமிழழகன் உட்படப் பலர் திரண்டு வழக்கமான தாரை தப்பட்டை, சரவெடி என ஆர்ப்பாட்டம் இன்றி எளிய முறையில் ஆதரவு முழக்கங்கள் மட்டும் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.