அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பு தஞ்சாவூர்: தமிழக அரசுடன் இணைந்து மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனையின், தஞ்சாவூர் கிளை மருத்துவமனை சேவை தொடக்க விழா இன்று (செப்.28) நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி, மருத்துவமனை சேவைகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசும்போது, "முதலமைச்சர், டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். விவசாயம் சார்ந்த தொழில் பேட்டையை வெகு விரைவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.
இந்தியாவுக்குள் வரும் அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் தமிழ்நாட்டிற்குத்தான் கொண்டு வருகின்றனர். ஒரு சில நேரங்களில் மத்திய அரசின் ஒரு சில அழுத்தங்கள் காரணமாக சிலர் போவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அதைத் தாண்டி இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
80 முதல் 85 சதவீதம் வரை மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் உரிய வளர்ச்சியைக் கொண்டு வந்து சேர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தென் மாவட்டங்களில் பல இடங்களில் தென்னை சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது.
குறிப்பாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 4 நிறுவனங்களிடம் பேசி உள்ளோம். இதற்காக நிலத் தேவைகள் அதிகமாக உள்ளது. நில எடுப்பு நடந்து முடிந்த பிறகு விரைவில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், முதலீட்டாளர்களின் மாநாடு நிச்சயமாக மிகப்பெரிய முதலீடுகளை ஈர்க்கும் என்றும், தமிழகத்தை knowledge capital of india ஆக மாற்றுவதுதான் நோக்கம் என்றும், Made In Tamilnadu என்ற Mark நாம் போட வேண்டும், அதை போடுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறினார்.
தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி சார்ந்த வேளாண் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறு, குறு தொழில்கள் நலிவடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் தஞ்சையில் அமைக்கப்பட்டு வரும் மினி டைடல் பார்க் கட்டிடப் பணியை ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்