தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் மற்றும் பம்பப்படையூர் கிராமங்களில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடங்களுக்கு இன்று (டிச.1) அடிக்கல் நாட்டினார். பின்னர் ஏராளமானோருக்கு, கறவை மாடுகளுக்கான கடனுதவி மற்றும் கால்நடைகளுக்கான பராமரிப்பு கடன் என நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், தாராசுரம் காய்கறி சந்தை எதிரே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஆவின் பாலகத்தை (Aavin) பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்துவைத்தார். அப்போது எஸ் கல்யாணசுந்தரம் எம்பி, மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் கும்பகோணம் க.அன்பழகன், திருவையாறு துரை சந்திரசேகர், மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.
தொடர் மழையால் சென்னையில் அதிகரித்த பால் தேவை:பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், 'தொடர் மழை காரணமாக தற்போது சென்னையில் வழக்கத்தை விட 70 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனையாகிறது. மழைக்காலத்தில் பால் தேவை எவ்வளவு அதிகரித்தாலும் அதற்கேற்ப, தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் 'ஆவின் பால்' கிடைக்க விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், பால் உற்பத்தியை பெருக்க, மானியத்துடன் கூடிய கடன், வங்கி கடன் ஆகியவை தற்போது அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 'வெண்மை புரட்சி': குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.200 கோடி அளவிற்கு கறவை மாடுகள் வாங்கவும், கால்நடைகள் பராமரிப்பிற்காகவும் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதற்கான வங்கி கடனுக்கான வட்டி 15 சதவீதத்தில் இருந்து தற்போது 9 சதவீத வட்டியாக குறைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தற்போது கடன் பெறுவதற்காக, கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சத்தி 10 ஆயிரம் மனுக்கள் வரப்பெற்று அவை பரிசீலனையில் உள்ளது.