தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை சார்பில் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் அறக்கட்டளை, முதலாம் ஆண்டு விழா இன்று (மே.13) நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 'படைப்பாளர் விருது' மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'மத்திய அரசு உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்குக் காரணம், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே, உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 100% உயர்கல்வி பெறுகின்ற சூழல் வரும், 'புதுமைப் பெண்' என்ற மகத்தான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.