இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்தச் சட்டத்தினால் குறைந்தபட்ச ஆதார விலை என்பது பாதிக்கப்படாது.
ஏற்கனவே உள்ள சந்தையில் பாதிப்பு இருக்காது. அடுத்ததாக கொண்டுவந்த சட்டம் விவசாய ஒப்பந்த சட்டம். இச்சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இச்சட்டத்தின் மூலம் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு கிடையாது. சட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும். இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் அரசு அவர்கள் பக்கம்தான் இருக்கும். ஏற்கனவே, விவசாயிகளுக்காக ஊக்கத் தொகை, விவசாயிகளின் மத்திய அரசு பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தி பொருள்களுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய முடியும். இயற்கை பேரிடரால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் காப்பீட்டுத்தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும். இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கும். அதனை அரசு வழங்கும்.
அனைத்து பிரச்னைகளையும் அரசு கவனித்துக் கொள்ளும். இந்த அரசு விவசாயிகளுக்கான நண்பனாக உள்ளது. சந்தையில் உற்பத்திப் பொருட்களின் விலை என்பது அதிகரித்தால் இடைத்தரகர்கள் தான் பயன் அடைந்தார்கள். தற்பொழுது இச்சட்டத்தின் மூலம் நேரடியாக இந்த பலனை விவசாயிகளே அடைய முடியும்" என்றார்.