கோயில் யானைக்காக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயிலில் உள்ள யானை மங்களம், நாள் தோறும் உற்சாகமாக குளிக்க வசதியாகவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் கோயில் வளாகத்திற்குள் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் உருவான புதிய நீச்சல் குளத்தை, நேற்று (ஜனவரி 23) இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து மங்களம் யானை, சாய்வு தளம் வழியாக இறங்கி நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டதை அமைச்சர் உள்ளிட்ட ஏராளமானோர் இதனை திரண்டு நின்று ரசித்து மகிழ்ந்தனர். கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த சைவத்திருத்தலங்களில் ஒன்றாகும்.
இந்த கோயிலுக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு, மறைந்த காஞ்சி மகாபெரியவர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 14 வயது பெண் யானை மங்களம் என பெயரிட்டு வழங்கினார். அப்போதில் இருந்து கடந்த 42 ஆண்டுகளாக இக்கோயில் தொடர்ந்து நாள்தோறும் வழிபாட்டு சேவையிலும், பக்தர்களை ஆசிர்வதிக்கும் சேவையிலும் தன்னை முழுமையாக அர்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்திக்கொண்டதுடன், இதனால் இக்கோயில் செல்லப்பிள்ளையாக 42 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறது.
இதன் பலனாக, இக்கோயிலில் பணியாற்றும் சிவாச்சாரியார்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் கோயிலுக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் என பலரிடமும், நல்ல பரிச்சம் ஏற்பட்டதன் பலனாக, மங்களம் அனைவரிடமும் நல்ல முறையில் பழகும் தன்மையும், தனிப்பட்ட முறையில் அனைவரிடத்திலும் அலாதி பிரியமும், அன்பும் கொண்டது என்றால் அது மிகையல்ல.
மங்களம் யானையை நாள்தோறும் கோயில் போர்செட் தண்ணீரில் என்ன தான் மணி கணக்கில் குளித்தாலும், ஆறு, குளங்களில் ஆனந்தமாக நீராடுவதை போன்ற சுகத்தை பெற முடியாது என்பதால், மங்களத்தை உற்சாகப்படுத்தும் வகையில், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ரூபாய் 14 லட்சம் நிதியுதவியுடன் கோயில் வளாகத்தில், இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளம் 70 அடி நீளமும், 30 அகலமும் கொண்ட இடத்தில், வெளிப்பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ளவும், உட்புறத்தில் ஒரு லட்சத்தி 17 ஆயிரத்தி 500 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டுள்ளது. இறங்க சாய்வு தளத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இது, பயன்பாட்டிற்கு வந்த பிறகு 56 வயதான கோயில் யானை மங்களம் நாள்தோறும் இந்நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளிக்கும் வசதி கிடைக்கும் இது, மங்களத்திற்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க:தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை தானம் கொடுத்தால் வரவேற்போம் - அமைச்சர் சேகர்பாபு