தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான்கு லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகள் வேளாண் மின் இணைப்பிற்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் மின்துறை அமைச்சர் தங்கமணி, நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன் பிறகு வந்த அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியான போதும், விவசாய மின் இணைப்பு குறித்த அறிவிப்பிற்கு மட்டும் இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை.
எனவே இதனை கண்டித்தும், அமைச்சரின் அறிவிப்பு காற்றோடு காற்றாக கலந்து விடக்கூடாது என்பதனை சுட்டிக்காட்டும் வகையில் விவசாயிகள் இன்று நூதன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, தஞ்சாவூர் அரசு கலைக்கல்லூரி அருகேயுள்ள காவிரியாற்றில் இறங்கி ஏராளமான விவசாயிகள் தகுந்த இடைவெளியுடன் நின்று, பட்டம் செய்து அதில் அமைச்சரின் அறிவிப்பை எழுதி ஒட்டி காற்றில் பறக்கவிட்டு நூதன முறையில் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.