தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் சுகாதார மாவட்டமாக உருவாகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Thanjavur news

கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் 6 கோடியே 17 லட்சம் ரூபாயில் அமையவுள்ள கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

கும்பகோணம் சுகாதார மாவட்டமாக உருவாகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கும்பகோணம் சுகாதார மாவட்டமாக உருவாகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : May 18, 2023, 9:38 AM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடைப்பேச்சு

தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை வளாகத்தில், 6 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடங்களுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று (மே 17) மாலை நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதனையடுத்து கட்டடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி, கல்வெட்டுகளைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், தனது ஓராண்டுத் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும் பகுதியான 4 கோடியே 75 லட்சம் ரூபாயை மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக வழங்கியது மகத்தானது.

அது ஒரு வரலாற்றுச் சாதனை. அவரை எப்படி பாராட்டினாலும் தகும். மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்து 713 ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆயிரம் கட்டடங்கள் பாழடைந்து, பயன்பாட்டில் இல்லை. ஆயிரத்து 500 கட்டடங்கள் வாடகை இடத்தில் இயங்குகிறது. எனவே, சுமார் 3 ஆயிரம் புதிய ஆரம்ப சுகாதார கட்டடங்கள் கட்ட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இதற்கு குறைந்தபட்சம் தலா 30 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அரசின் நிதி நெருக்கடியில், இதனை உடனடியாக அரசால் ஓரிரு ஆண்டுகளில் செய்து முடித்து விட முடியாது. எனவே, மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியினை தாராளமாக தந்து உதவ வேண்டும். மாதந்தோறும் 7 அல்லது 8 நாட்கள் வாரத்தில் இரு நாட்கள் எனப் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பல்வேறு பணிகளை ஆய்வு செய்கிறேன். கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர்கள் எண்ணிக்கை 42. அதில், தற்போது 39 பேர் பணியில் உள்ளனர். ஆகையால், 3 காலிப் பணியிடங்கள் மட்டும் உள்ளன. இது விரைந்து நிரப்பப்படும்.

கடந்த கால ஆட்சியில், சுமார் 6 அல்லது 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படவே இல்லை. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, தற்போது 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என 50 அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த கால ஆட்சியில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புகள், தமிழ்நாட்டு மக்களுக்கு 111ஆகத்தான் அமைந்திருந்தது. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த, மாநிலம் முழுவதும் 778 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அதுவும், இன்னும் ஒரு வார காலத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 12 மையங்கள் அமைகிறது. தஞ்சையில் 8 இடங்களிலும், கும்பகோணத்தில் 3 இடங்களிலும் மற்றும் பட்டுக்கோட்டையில் ஒரு இடத்திலும் அமைகிறது. மாநிலம் முழுவதும் 38 வருவாய் மாவட்டங்கள் இருந்தபோதும், சுகாதார மாவட்டம் 45ஆக உள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று, கும்பகோணம் சுகாதார மாவட்ட அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருக்கும் கூடம் மற்றும் சிறப்பு வார்டு கட்டுமானப் பணி, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மாப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திப்பிராஜபுரம் சேஷம்பாடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 22 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடியிருப்புக் கட்டடம் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த விழாவில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை எம்.பி. செ.இராமலிங்கம், எம்எல்ஏக்கள் கும்பகோணம் அன்பழகன், பாபநாசம் ஜவாஹிருல்லா, பூம்புகார் நிவேதா முருகன், மாநகராட்சி மேயர் கே.சரவணன்,

துணை மேயர் சுப.தமிழழகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் முத்துசெல்வம், திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு உள்பட மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் ஆர்.என். ரவி!

ABOUT THE AUTHOR

...view details