தஞ்சாவூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கடந்த 12ஆம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் தற்போது தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் இன்று திறந்து விடப்பட்டது.
இந்த நிகழவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று காவிரி ஆறு, வெண்ணாறு கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தனர்.
மேலும் நெல்மணிகள் மற்றும் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். இந்த தண்ணீர், கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடியும், வெண்ணாற்றில் 500 கன அடியும், கல்லணை கால்வாயில் 100 கன அடியும், கொள்ளிடத்தில் 500 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி பாசன பகுதிகளில் தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தபின் உரியநீர் காரைக்கால் பாசன பகுதிக்கு பங்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,08,951 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 92,214 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22,805 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93,750 ஏக்கர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 24,976 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி என மொத்தம் 3,42,696 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.